×

வாரணவாசி ஊராட்சியில் பூட்டி கிடக்கும் காவல் உதவி மையம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வாலாஜாபாத்: வாரணவாசி ஊராட்சியில், காவல் உதவி மையம் பூட்டிக்கிடைக்கிறது. இதனை திறந்து வைத்து காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சியை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாரணவாசி வந்துதான் இங்கிருந்து தாம்பரம், ஒரகடம், படப்பை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இவை மட்டுமின்றி இந்த ஊராட்சியை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாரணவாசி ஊராட்சி சுற்றியுள்ள கிராமங்களில் தங்கியிருந்து நாள்தோறும் சுழற்சி முறையில் பணிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும் வாரணவாசி ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருகாமையில் ஒரகடம் காவல் நிலையம் சார்பில், காவல் உதவி மையம் பூத் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பூத் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வாரணவாசியை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு உள்ளவர்கள் வாரணவாசி வந்துதான் இங்கிருந்து பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகிறோம். மேலும், எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும் இந்த ஊராட்சியில் ஏற்படும் சிறு சிறு அசம்பாவிதங்கள், சாலை விபத்துகள், கிராமங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க, 8 கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரகடம் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும். இதனால், எங்கள் பகுதியிலேயே ஒரு காவல் உதவி மையம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இருப்பினும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த காவல் உதவி மையத்தை அமைத்து இதுநாள் வரை பயன்பாடின்றி பூட்டியே போடப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் ஏற்படும் பிரச்னைகளை ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால், காவலர்கள் கிராமப்புறங்களுக்கு வந்து சேர்வது என்பது காலதாமதம் ஆகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாரணவாசி பகுதியில் உள்ள காவல் உதவி மையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post வாரணவாசி ஊராட்சியில் பூட்டி கிடக்கும் காவல் உதவி மையம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Locked Police Help Center ,Waranavasi Panchayat ,Wallajahabad ,Police Help Center ,Dinakaran ,
× RELATED கட்டவாக்கம் ஊராட்சியில் நெல் சேமிப்பு மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு